உள்ளூர் செய்திகள்

தைப்பூசம்: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2025-02-11 12:26 IST   |   Update On 2025-02-11 12:26:00 IST
  • நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
  • பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன. 

Tags:    

Similar News