உள்ளூர் செய்திகள்

ஊதா, ஊதா, ஊதாப்பூ... கொடைக்கானலில் வசந்த காலத்தை வரவேற்கும் ஜெகரண்டா மலர்கள்

Published On 2025-03-04 11:35 IST   |   Update On 2025-03-04 11:35:00 IST
  • ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.
  • மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அருவிகள், நீரோடைகள் போன்றவை வருடம் முழுவதும் ரம்யமாக காட்சியளிக்கிறது.

மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும். இதுதவிர ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உள்பட சீசன் காலங்களில் பூத்துக்குலுங்கும் விதவிதமான மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், கொடைக்கானல் போன்ற மலை வாழ் சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் மிகவும் விரும்புவது கோடை காலமாகும்.

இந்த கோடை வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக தற்போது மலைப்பகுதிகளில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து பழனி மற்றும் வத்தலக்குண்டு செல்லும் சாலைகளான பெருமாள்மலை, வடகவுஞ்சி, ஊத்து உள்ளிட்ட வெப்பம் அதிகமுள்ள கீழ்மலைப்பகுதிகளில் இந்த மரங்களின் இலைகள் முழுவதும் உதிர்ந்து, மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது. இது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்பொழுது பூக்கத்துவங்கும் இம்மலர்கள் இன்னும் சில மாதங்கள் முழுமையாக பூக்கும் தன்மையை அடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை காலத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை வெகுவாக ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags:    

Similar News