நவீன தொழில் நுட்ப வசதியால் 2500 யானைகள் பாதுகாப்பாக ரெயில் தண்டவாளத்தை கடந்தன- சுப்ரியாசாகு ஆய்வு
- தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது.
- கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது.
கோவை:
நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில் ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.
கோவை-பாலக்காடு இடையிலான ரெயில் வழித்தடத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு லைன்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு யானைகள் மீது மோதாமல் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவி வருகிறது.
இந்தநிலையில் மதுக்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் அருண் மற்றும் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்களான பழங்குடியின பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பு நிறுவியது முதல் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பாதையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு யானைகள் கடந்து சென்று வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து நாட்டிலேயே முன்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி வருகிறது என்றார்.