உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

Published On 2025-01-19 14:13 IST   |   Update On 2025-01-19 14:13:00 IST
  • போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
  • மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பகவுண்டன் புதூர் மேற்கு, கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவருக்கு தமிழரசி (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கங்கா நகர் சந்திப்பில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (24) என்ற இளைஞர் மளிகை கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளார். கடைக்காரர் சுப்பிரமணி சிகரெட் இல்லை என்று கூறியதால், 2 ரூபாய்க்கு பீடி மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் அப்பகுதிக்கு வந்த முகமது அன்சாரி, மதுபாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி திரியை பற்ற வைத்து, மளிகை கடை மீது வீசினார். மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததில் கடையின் முன்பு அடுக்கி வைத்திருந்த 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் மற்றும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தின்பண்டங்களும் எரிந்து கருகியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடியதால் முகமது அன்சாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தான்தோன்றிமலை போலீசார் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து, தப்பியோடிய முகமது அன்சாரியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News