வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய காட்டு யானை
- வீட்டு வாசல் முன்பு நின்ற காட்டு யானையை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- யானை அரிசிப்பையை இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது.
கவுண்டம்பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் நகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டு அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி வேலுமணி என்பவர், காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அதே யானை தொடர்ந்து ஒவ்வொரு கிராமமாக புகுந்து விடியும்வரை பொதுமக்களை அலற விட்டு வருகிறது.
தெக்குபாளையம் கென்னடி தென்றல் அவின்யூ பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் நேற்றிரவு வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தெக்குபாளையம் தென்றல் அவின்யூ பகுதிக்கு வந்தது. பின்னர் அது வாலிபர்கள் தங்கிய வீட்டின் முன்பாக வந்து நின்றது.
இதற்கிடையே வீட்டு வாசல் முன்பு நின்ற காட்டு யானையை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் சமையல் கியாஸ் அடுப்பை அவசரம்-அவசரமாக அணைத்துவிட்டு சுவர் ஓரமாக பதுங்கி கொண்டனர்.
தொடர்ந்து அந்த யானை தலையின் முன்பகுதியை மட்டும் வீட்டுக்குள் நுழைத்து, அங்கிருந்த டப்பாவை தும்பிக்கையால் இழுத்து கீழே கொட்டிவிட்டு அரிசியை மட்டும் தின்றது. மேலும் வீட்டுக்குள் இருந்த சமையல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இழுத்து வெளியே வீசி எறிந்தது. அதன்பிறகு அந்த யானை வெளியேறி சென்றது.
ஆனால் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அதே வீட்டுக்கு திரும்பி வந்த காட்டு யானை, ஒரு காலை மட்டும் வீட்டுக்குள் எடுத்து வைத்து, பாதி உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டு தும்பிக்கையால் மீண்டும் பொருட்களை தேடியது.
அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த தொழிலாளர்கள், சமைப்பதற்காக வைத்திருந்த அரிசிப்பையை தூக்கி போட்டனர். தொடர்ந்து அந்த யானை அரிசிப்பையை இழுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்து காட்டு யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர்.