இலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.79 லட்சம் மதிப்பிலான தங்கம்
- கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.
- சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ விமானம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந் தேதி இலங்கை தலை நகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் விமானத்தில் நுழைந்த போது கழிவறையில் கேட்பாரற்று பை கிடந்தது. இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் உள்பகுதிக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் கழிவறையில் கிடந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அந்த பையினுள் ரூ.79 லட்சம் மதிப்பிலான 985 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதனை விமானத்தில் விட்டு சென்றவர்கள் யார்? அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து விட்டு சென்றனரா? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில் நேற்று ஒரே நாளில் 985 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்த போது அவர் தனது உடமையில் மறைத்து வெளி நாட்டிற்கு கடத்த இருந்த ரூபாய் 435 வெளிநாட்டு பணங்கள் அதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 3,72,000 மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் 30000 என மொத்தம் 4,02,000 மதிப்பிளான இந்திய மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.