மயிலாடுதுறையில் பரவலாக மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன- விவசாயிகள் வேதனை
- திருவெண்காடு, பூம்புகார், வானகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மழை பெய்தது.
- நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல் முளைத்து விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
இவற்றில் 60 சதவீதத்துக்கு மேல் கதிர்கள் முற்றிய நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக நிரந்தர கட்டிடம் உள்ள 60 கொள்முதல் நிலையங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக திறக்கப்பட்டன.
தற்போது விவசாயிகள் அறுவடையை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தது.
தரங்கம்பாடி, நல்லத்துக்குடி, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பழையாறு, திருவெண்காடு, பூம்புகார், வானகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மழை பெய்தது.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் முற்றிய நெற்பயிர்கள் மற்றும் இளம்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழை நீடித்தால் மழைநீர் வடிய வழி இன்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல் முளைத்து விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணி வரையிலான நிலவரப்படி மயிலாடுதுறையில் 104.80 மில்லி மீட்டர் மழையும், மணல்மேடு 23 மி.மீ, சீர்காழி 50.80 மி.மீ,கொள்ளிடம் 10.20 மி.மீ, தரங்கம்பாடி 117.20 மி.மீ, செம்பனார் கோவில் 114.60 மி.மீ மழை பெய்துள்ளது.