பட்டியலின சிறுவனை காலில் விழ வைத்து சித்ரவதை-மிரட்டல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார்.
- 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகேயுள்ள சங்கம்பட்டி கிராமத்தில் 17 வயது பட்டியலின சிறுவன் புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
அப்போது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். இதையடுத்து அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வராமல் மதுரை விக்கிரமங்கலத்தில் வசித்து வந்தார். அப்போது எதிர்பிரிவை சேர்ந்த சிலர் பயங்கர அயுதங்களுடன் விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த மாற்று சமூகத்தை சார்ந்த 6 பேர் அவரை கடத்திச் சென்று ஊர் கண்மாய் அருகே வைத்து செல்போனை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழச்செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
மேலும் 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர். தொடர்ந்து அச்சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ், நித்தீஸ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.