தமிழ்நாடு

பட்டாபிராம் இரட்டை கொலை எதிரொலி- காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Published On 2025-01-19 14:57 IST   |   Update On 2025-01-19 14:57:00 IST
  • குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
  • தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.

முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பட்டாபிராம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News