உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் நவநீத கிருஷ்ணன் கோயிலில் மார்கழி மாத கூடாரவல்லி திருவிழா

Published On 2023-01-11 19:28 IST   |   Update On 2023-01-11 19:28:00 IST
  • ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்த மார்கழி 27-ந்தேதி கூடாரவல்லி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
  • அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார்.

மாமல்லபுரம்:

ஸ்ரீரங்கம் கோயிலில் வீற்றிருக்கும் ரங்கநாதரையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மார்கழி மாதத்தில் 27 நாட்கள் விரதமிருந்த ஆண்டாள், திருப்பாவை பாடல்களை பாடி பாவை நோன்பு இருந்து அவரது திருவடிகளை அடைந்தார். ஆண்டாள் தனது பாவை நோன்பை நிறைவு செய்த நாளான மார்கழி 27ம் தேதியை கூடாரவல்லி தினம் என்கிறோம். மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நிகழ்வுகளில் கூடாரவல்லி வைபவமும் ஒன்று. அனைத்து பெருமாள் கோயில் மற்றும் கிருஷ்ணர் கோயில்களில் கூடாரவல்லி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், மாமல்லபுரம் ஸ்ரீநவநீதிகிருஷ்ணன் கோயிலில் மார்கழி 27-ம் நாளான இன்று கூடாரவல்லி திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார்.

அப்போது நவநீத கிருஷ்ண பக்த பஜனை குழுவினர் திருப்பாவை பாடல்கள் பாட, சிறுவர்கள் பாரம்பரிய காவி வேட்டி அணிந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியை சுற்றி வந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

முன்னதாக இன்று காலை ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் ஆராதனை நடந்தது. கூடாரவல்லி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பயணிகள் சிலரும் சிறுவர்களின் கோலாட்ட நிகழ்ச்சியை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News