வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைப்போம்- சீமான்
- 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
- மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழ வைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள்தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வளத்தை உங்களால் உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சத்தை ஒழித்து விடலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள், அவற்றை தீர்க்க வந்தவர்கள்.
உங்களை நம்பித்தான் நிலத்தை காக்க, வளத்தை காக்க, நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். அனைத்து கட்சிகளும் இன்று நாம் வளர்ந்துவிட்டதை கண்டு பொறாமைப்படுகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரை கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கொடுக்கிறீர்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் மாறாமல் பசுமையாக வைத்து இருக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.