தமிழ்நாடு

போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் மூலம் தமிழகத்தில் 8,898 வழக்குகள் முடித்துவைப்பு

Published On 2025-03-03 08:02 IST   |   Update On 2025-03-03 08:02:00 IST
  • நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
  • தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.

சென்னை:

'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.

இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News