உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில் ஜங்ஷனாக கோயம்பேடு நிலையம் மாறுகிறது- மூன்று வழித்தடங்கள் சந்திக்கின்றன

Published On 2023-04-27 12:55 IST   |   Update On 2023-04-27 12:55:00 IST
  • இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஆவடி வரை பாதைகளை நீட்டிக்க அதிக பிளாட்பார்ம் அமைக்கப்படுகிறது.

சென்னை:

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து மெட்ரோ ரெயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதைவிட கூடுதல் காலமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் அடுத்த மெட்ரோ ரெயில் மையமாக கோயம்பேடு சில ஆண்டுகளில் அமைய இருக்கிறது. 3 வழித்தடங்கள் சந்திக்கும் ஜங்ஷனாக மாறுகிறது.

கோயம்பேடுவில் தற்போதுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேலே 2-ம் கட்ட திட்டத்தில் ரெயில் நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஆவடி வரை பாதைகளை நீட்டிக்க அதிக பிளாட்பார்ம் அமைக்கப்படுகிறது.

2 வது கட்ட திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை- சோழிங்கநல்லூர் இடையேயான 5 - வது வழித்தடத்தில் கோயம்பேடு இடம்பெறுகிறது. 2-வது கட்ட திட்டத்தில் முதலில் கோயம்பேடு இடம்பெறவில்லை. பின்னர் அது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

எதிர்காலத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரை மெட்ரோ ரெயில் பாதை நீடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோயம்பேடு ரெயில் நிலையம் குறைந்த பட்சம் 3 வழித்தடங்களை இனணக்கும். இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: -

இரண்டாம் கட்ட பணியின் 5-வது வழித்தடம் கோயம்பேடுவில் சென்ட்ரல் - பரங்கிமலை இடையேயான வழித்தடத்துடன் இணைக்கப்படும். எதிர்காலத்தில் திருமங்கலம் - ஆவடி விரிவாக்க பாதையும் இனணக்கப்படும்.

கோயம்பேடுவில் கட்டம்-2 நிலையத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, ஆவடி வரையிலான நீட்டிப்புப் பாதைக்கு கூடுதல் தளங்களைக் கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக விட்டுவிடுகிறோம். அந்த பிளாட்பார்ம்களை நாங்கள் 2- ம் கட்ட நிலையத்தின் லெவலுடன் இணைப்போம், இது முதல் கட்ட ஸ்டேஷனுடன் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகப்பேர், அம்பத்தூர் ஆவடியில் வசிப்பவர்கள் சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு செல்ல எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் மூலம் ஏறி கோயம்பேட்டில் பிளாட்பாரங்களை மாற்றி கொள்ளலாம்.

விமான நிலையத்துக்கும் நேரடியாக செல்லலாம். இதேபோல மாதவரம் அல்லது ஓ.எம்.ஆர். பகுதிக்கும் பயணிக்க முடியும்.

Tags:    

Similar News