தமிழகத்தில் வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது- கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
- தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும்.
- தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த புதிதாக பணியில் சேர்ந்த, கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் பேசியதாவது:-
தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும்.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவி லயே முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது.
20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 95 லட்சம் பசுவினங்களும், 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன. கிராமப்புற ஏழை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதின் மூலம் அவர்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொரு ளாதாரத்தை உயர்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது.
தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு சுமார் 41 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள் 1141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்படாமல் இருந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலாலும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியாலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்களை ஊக்கப்படுத்தி துறையின் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கும் புத்தாக்க பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த புதிதாக பணியில் சேர்ந்த 50 உதவி கால்நடை மருத்துவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் அருணாச்சலகனி, இளங்கோவன், ஆவின் பொது மேலாளர் தியானிஷ்பாபு, பால் வளம் துணை பதிவாளர் கணேசன், மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், துணை இயக்குநர் ரோஜர், உதவி இயக்குநர்கள் மகேஸ்வரி, தங்கராஜ், ஜான் சுபாஷ், முருகன், ரகுமத்துல்லா, ஆபிரகாம் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உதவி கால்நடை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.