வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை-புறநகர் பகுதியில் மழைக்கு வாய்ப்பு
- வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரக்கூடும்
- லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலு வடைந்து விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
இதனால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளுத்து வாங்கிய மழை வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
இது வடக்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.