வீட்டின் கழிவறை தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடு- போலீசார் விசாரணை
- வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் நாங்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில் அவரது பழைய வீடு இடிக்கப்பட்டு அதன் அருகிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த வீட்டின் அருகில் உள்ள கழிவறை தொட்டி மட்டும் அகற்றப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இந்த தொட்டியானது மூடி கொண்டு மூடாமல் திறந்த நிலையில் கிடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் சிலர் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவன் ஒருவன் விளாசிய பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்துள்ளது. இதனால் பந்தை தேடி சிறுவர்கள் கேசவன் வீட்டின் அருகே வந்துள்ளனர். சுற்று முற்றி தேடி பார்த்தனர் ஆனால் பந்து கிடைக்கவில்லை. அப்போது அங்குள்ள கழிவறை தொட்டியின் உள்ளே பந்து கிடக்கிறதா? என சிறுவர்கள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், சிறுவர்கள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கிராமமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்த பாகசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகசாலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எலும்புக்கூட்டில் கிழிந்த நிலையில் சேலை துண்டுகள் கிடந்துள்ளது. இதனால் அது பெண்ணின் எலும்புக்கூடாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படியே இருந்தாலும் அவர் இறந்ததற்கு காரணம் என்ன? தொட்டியில் உள்ளே தவறி விழுந்து இறந்துள்ளாரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதற்காக இன்று தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர் குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதற்கு பின்னரே எத்தனை நாட்களான எலும்புக்கூடு? என்பன உள்ளிட்ட முழு தகவல் தெரியவரும்.
வீட்டின் கழிவறையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் கிராமமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.