மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- புனிதநீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் குருபரிகார தலமாக விளங்கும் ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம்.
வேறெங்கும் இல்லாதவாறு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயில் 19 ஆண்டுகளு க்குப்பிறகு புனரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம்தேதி தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தருமபுர ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கோவில் தலைமை குருக்கள் பாலச்சந்திர தலைமையில் வேதா விற்பனர்கள் 8ம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள், மகா பூரணாகுதி மகாதீபாரதனை செய்யப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தது.
மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமானத்தில் உள்ள கோபுரத்தை வந்து அடைந்தது.
சுவாமி கருவறைக்கு மேல் தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், மேதா தட்சிணாமூர்த்தி தங்க கலசம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் மந்திரங்கள் ஓத புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷே கத்தில் மதுரை ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, துழாவூர் ஆதீன மடாதிபதி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் அயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.