முன்விரோதத்தில் இரும்பு வியாபாரி கொலை- சிறுவன் உள்பட 3 பேர் கைது
- தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
- சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து வடக்கு புளியம்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 27).
இவர் கேரளாவில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஹாசினி(2) என்ற மகளும் உள்ளனர். சேதுபதி தனது பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக கேரளாவில் வசித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சேதுபதி சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று மாலை வெளியே சென்ற சேதுபதி வடக்கு புளியம்பட்டியில் இருந்து தெற்கு அச்சம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், சேதுபதியை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 1 வருடத்திற்கு முன்பு சேதுபதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது வாகனத்திற்கு டீசல் நிரப்புவதற்காக வன்னிகோனேந்தல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பங்கில் வேலை பார்த்த வன்னிகோனேந்தலை சேர்ந்த பெனிஸ் குமாருக்கும் (26), சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சேதுபதி, பெனிஸ்குமாரை அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்துக்கொண்டு பெனிஸ்குமார், சேதுபதியை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார்.
சமீபத்தில் சேதுபதி கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவர் தனது ஊரில் நின்றவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் -அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதனை பெனிஸ்குமாரின் நண்பர்களான வினித் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் பார்த்து பெனிஸ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பெனிஸ் குமார், இந்த தகவலை கேள்விப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
உடனே பெனிஸ்குமார், தனது நண்பர்களான வினித் மற்றும் சிறுவனுடன் சேர்ந்து கடந்த 3 நாட்களாக சேதுபதியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார். சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து சென்று நோட்டமிட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் 3 பேரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
பின்னர் சேதுபதியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரையும் தேவர்குளம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.