மோட்டார் சைக்கிள், நகையை பறிகொடுத்த ஊழியர்
- லிப்ட் கேட்டவருக்கு உதவச் சென்றபோது பரிதாபம்
- ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கோவை,
கோவை செல்வபுரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 47).
இவர் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் பூ மார்க்கெட்டில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்றார். ஆனால் கால தாமதமாக சென்றதால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து கார்த்திகேயன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தன்னை செல்லும் இடத்தில் கொண்டு சென்று விடுமாறு கூறினார். மேலும் கார்த்திகேயனிடம் அந்த வாலிபர் தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவதாக கூறினார்.
இதையடுத்து அவரிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்துவிட்டு கார்த்திகேயன் பின்னால் அமர்ந்திருந்தார். அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை வேறு பாதையில் ஓட்டிச் சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முயன்றார்.
அப்போது வாலிபர் கார்த்திகேயனை மிரட்டி அவருடைய மோட்டார் சைக்கிள், செயின், மோதிரம், செல்போன், ரொக்கப்பணம் ரூ.900 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
இதில் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டி பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.