வாழப்பாடி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூஜை திருவிழா
- பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.
- அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி காமராஜ்நகரில் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது.
இக்கோவிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது. அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.
இந்நிகழ்வு, காண்போரை பரவசமூட்டும் வகையில் அமைந்தது. பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியில் குல தெய்வமான பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு,கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இளம் தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.
நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று முன்தினம் திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தியதும். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள முன்னடியான் என அழைக்கப்படும் கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் படையலில் வைத்து வழிபாடு நடத்தியதும் குறிப்பிடதக்கதாகும்.
இதுகுறித்து, வாழப்பாடி புதுப்பாளையம் சரவணன், அக்ரஹாரம் அங்கமுத்து, கலைச்செல்வி ஆகியோர் கூறியதாவது:
பணி நிமித்தமாக பல்வேறு பகுதியில் வசித்து வரும் உறவினர்களை, ஒரே இடத்தில் சந்தித்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டு மொத்த பங்காளிகளின் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா கொண்டாடுவதை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து வருகிறோம்.
100 குடும்பங்களை சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து குல தெய்வ முப்பூஜை வழிபாடு நடத்தியது பெரும் மகிழ்ச்சி–யை ஏற்படுத்தியதோடு, உறவை பலப்படுத்தி ஒற்று–மையை அதிகரித்துள்ளது' என்றனர்.