பிறந்த கிராமத்தில் ஆஸ்பத்திரி அமைத்து சேவை செய்யும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்
- பெருஞ்சேரி கிராமத்திலேயே ஆஸ்பத்திரி அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
- மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி தெற்குத் தெருவை சேர்ந்த சேஷாசலம் என்பவரின் பேரன்கள் கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.
இவர்களில் கண்ணா லண்டனிலும், டாக்டர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது சேவை செய்ய எண்ணிய கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணனுடன் ஆலோசித்து பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மருத்துவ அவசர தேவைகளுக்கு 7 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்தனர்.
இதையடுத்து பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
இதற்காக தங்கள் தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தனர். தாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும், உறவினர்கள் ராஜதிலக், சுரேகா, தீபக் ஆகியோரை நிர்வாகிகளாகவும் நியமித்து, தங்கள் பூர்வீக வீட்டையே மருத்துவமனையாக மாற்றி உருவாக்கியுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளனர்.
எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமனை திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராமத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா, ராமகிருஷ்ணன் குடும்பத்தினரை கிராமமக்கள் மனமார வாழ்த்தினர்.