தேர்தல் பயிற்சிக்கு வராத 980 பேருக்கு நோட்டீஸ்
- பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது.
- பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
கோவை மாவட்த்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
மொத்தம் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 10 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ந் தேதி நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு காலை முதல் மாலை வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன்படி மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளில் 3,779 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 12,294 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு என மொத்தம் 15,073 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பயிற்சி நாளில் விடுமுறை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். பலர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கடந்த முறை பங்கேற்காத 980 பேரும் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில் மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள மிக முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, போல் மானிடரிங் சிஸ்டம் செயலி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.