பதிவுத்துறை அலுவலர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
- சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிய மறுத்த சார் பதிவாளர் தாக்கப்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.
- பதிவுத்துறை அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் என்ற வரிசையில் தற்போது பதிவுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் சார் பதிவாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
கடந்த வாரம், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை சார் பதிவாளர் பதிவு செய்ய மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் தானும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, சார் பதிவாளர் மீதும் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று, மதுரை மாவட்டம், பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிய மறுத்த சார் பதிவாளர் தாக்கப்பட்டு அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, பதிவுத்துறை அலுவலர்கள் தங்கள் பாதுகாப்பினை வலியுறுத்தி, நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் காவல் துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.