கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி
- அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு உழைத்தவர்.
- ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர்.
நெல்லை:
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்தநிலையில் பாளையங்கோட்டையை அடுத்துள்ள திருத்து கிராமத்தில் அவரது உடல் அடக்கம் இன்று நடை பெறுகிறது.
இதனையொட்டி அவரது இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்காக மிகுந்த நம்பிக்கையோடு பணியாற்றியவர் கருப்பசாமி பாண்டியன். இந்த பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அ.தி.மு.க.வை மிகப் பெரிய பேரியியக்கமாக உருவாக்குவதற்கு இதய பூர்வமாக உழைத்தவர். அவருடைய மறைவு தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
எந்த சூழலிலும் உதவி என்று யார் தன்னை நாடி வந்தாலும் உதவியவர். அனைத்து தரப்பினருக்காகவும் உழைத்தவர். பொதுச்சேவையை நிறைவாக செய்தவர். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
1982-ல் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் பணியாற்றிய விதம் எங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக அமைந்தது. அவருடைய ஆன்மா இறைவன் திருவடியில் அமைதியில் திளைக்கட்டும்.
பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருப்பசாமி பாண்டியன். அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமும் அதுதான். அதற்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மாவால் வழி பிறக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.