உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி கோவிலில் தங்க சப்பர வீதி உலா நடந்த காட்சி.

நாங்குநேரியில் பங்குனித்திருவிழா: வானமாமலை சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் பவனி

Published On 2023-04-02 14:55 IST   |   Update On 2023-04-02 14:55:00 IST
  • பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது.
  • விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு எண்ணை காப்பு நடைபெற்றது.

களக்காடு:

நாங்குநேரியில் உள்ள வானமாமலைபெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம் நம்மாழ்வாரால் 11 பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு பெற்றதும் ஆகும்.

பங்குனி பிரம்மோற்சவ திருவிழா

இத்தலத்தில் மட்டுமே ஸ்ரீசடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டத்திருவிழாவும், சித்திரை மாதம் பெரிய மரத் தேரோட்டமும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

தங்க சப்பரத்தில் பவனி

அதன்படி இந்த ஆண்டு பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு. தினசரி பெருமாள் தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனர்.

5-ம் திருநாள் அன்று கருடசேவை இடம்பெற்றது. 7-ம் திருநாளான நேற்று தங்கச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணை காப்பும் நடைபெற்றது.

தொடா்ந்து நாங்குநேரி மற்றும் ஆழ்வார்திருநகரி ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கச்சப்ப ரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தங்கச் சப்பரத்தில் காட்சி அளித்த பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரவில் கண்ணாடி சப்பரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்தார். விழாவின் 10-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News