வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- ஆய்வகத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரப் பகுதியில் வேளாண் துறையின் கீழ் இயங்கும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டீரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் ட்ரைகோகெரம்மா கைலோனிஸ் போன்றவை உற்பத்தி செய்யும் முறை மற்றும் பயிர்களில் அவை பயன்படுத்தப்படும் முறை குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆய்வகங்களில் உள்ள கருவிகளை பார்வையிட்டார். மேலும் விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் வேளாண் அலுவலர்களிடம் பல்வேறு வகையான விதை முளைப்பு திறன் கண்டறியும் பரிசோதனைகள் குறித்தும், விதை பரிசோதனை மேற்கொள்ளப்படும் செய்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் விதை முளைப்பு திறன் பரிசோதனை அறையினை பார்வையிட்ட கலெக்டர் அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள், விதை பரிசோதனைக்காக மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், இந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் விவசாயிகளுக்கு எந்த அளவில் பயனுள்ளதாக அமைந்துள்ளது, இந்த ஆய்வகத்தில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், அரணாரை கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் 2022-23-ன் கீழ் சரவணன் என்ற பயனாளிக்கு காளான் வளர்ப்பு குடில் அமைக்க ரூ.50,000 மானியமாக வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு குடிலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அரசின் சார்பில் வழங்கப்பட்ட மானியத்தொகை உதவியாக இருந்ததா? என்றும், காளான் வளர்ப்பு லாபகரமான தொழிலாக உள்ளதா? என்றும் விவசாயியிடம்கேட்டறிந்த கலெக்டர் காளான் வளர்ப்பு தொழிலை மேலும் பெருக்கி ஒரு தொழில்முனைவோராக உயர அரசின் திட்டங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். அப்போது வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.