உள்ளூர் செய்திகள்

குன்னூரில் தொடர் அட்டகாசம்: கரடியை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைப்பு

Published On 2024-12-28 03:50 GMT   |   Update On 2024-12-28 03:50 GMT
  • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

ஊருக்குள் புகும் கரடி ரேசன் கடைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு கூடங்களை சேதப்படுத்தி அங்குள்ள பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் கிளண்டல் நான்சச் மற்றும் கிளன் மோர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் கரடி அங்குள்ள குடியிருப்பு மற்றும் பள்ளிகளின் ஜன்னல் கதவுகளையும் சேதப்படுத்தியது. கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர அச்சப்பட்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்வோர் ஒருவித அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள். தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர்.

அதன்படி கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளான டைகர் ஹில், டென்ட் ஹில், நான்சச் ஆகிய 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

கரடிக்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது தெரியாத வகையில் முழுவதுமாக மரத்தின் கிளைகள் மற்றும் இலைகளை கொண்டு மூடி வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாகவே கரடியை கண்காணித்து வருகிறோம். கூண்டின் அருகே வரும் கரடி அதில் உள்ள பழங்களை மட்டும் ருசித்து விட்டு லாவகமாக கூண்டில் சிக்காமல் தப்பி ஓடிவிடுகிறது. தொடர்ந்து வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Tags:    

Similar News