திருவிடைமருதூர் அருகே விபத்து: தனியார் கல்லூரி பஸ்-மினி லாரி மோதியதில் 2 பேர் பலி
- கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது.
- படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்லூரி பஸ்சானது இன்று காலை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 20 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.
அதேவேளையில், கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சானது திருவிடைமருதூர் அடுத்துள்ள கோவிந்தபுரம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது சமீர் (வயது 25), சுந்தரபெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்த கார்த்தி (31) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.