உள்ளூர் செய்திகள்

கூடுதல் கட்டிடங்கள்: அரசுக்கு கோரிக்கை

Published On 2022-06-19 07:49 GMT   |   Update On 2022-06-19 07:49 GMT
  • ராமநாதபுரம் நகராட்சி பள்ளிகளில் இடநெருக்கடி காரணமாக கூடுதல் கட்டிடங்கள் கட்ட அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • போதிய இடவசதியின்றி ஒரு வகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமர வைத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு பயன்பாட்டில் இருந்த சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இதனால் போதிய இடவசதியின்றி ஒரு வகுப்பறையை இரண்டாக பிரித்து மாணவர்களை அமர வைத்துள்ளனர். நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் மரத்தடி நிழலில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

கடும் வெயில், பலத்த காற்று வீசும்போது ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கும் போதிய வகுப்பறைகள் இல்லாமல் கலையரங்கத்தில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்துகின்றனர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வரை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டினர்.

மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு தேவையான நிதி ஒதுக்கி பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News