கொடுமுடியாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்த காட்சி. அருகில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ்.
களக்காடு அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு- சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
- திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
- பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் கொடுமுடியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடி ஆகும்.
அணை நீர்மட்டம் உயர்வு
திருக்குறுங்குடி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதுபோல கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையில் 49 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை திறப்பு
இதையடுத்து அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி சபாநாயகர் அப்பாவு கொடுமுடியாறு அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்தார். படலையார் கால்வாய், நம்பியாற்று கால்வாய், வள்ளியூரான் கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கலந்து கொண்டவர்கள்
இதன் மூலம் நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவின் உள்ள 44 குளங்களும், 5781 ஏக்கர் விளைநிலங்களும் பயன் பெறும். மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் அதனை பொறுத்து, கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சேரன் மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, கண்காணிப்பு பொறியாளர் பத்மா, செயற்பொறியாளர் சிவகுமார், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பொதுப்பணித்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.