சாகுபுரம் டி.சி.டபுள்யூ. நிறுவனத்தில் தொழிலாளர்கள், நிர்வாகிகளின் ஒற்றுமை உணர்வு பாராட்டுக்குரியது- தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் டி.கே.ராமச்சந்திரன் புகழாரம்
- ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.
- தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையின் 64-வது கால்கோள் தின விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்
விழாவிற்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பக்குல் ஜெயின், விவேக் ஜெயின், மூத்த ஆலோசகர் முடித் ஜெயின், சீனியர் பிரசிடெண்ட் ஆசிஸ் ஜெயின், பிரசிடெண்ட் சாத்விக் ஜெயின், முதன்மை செயல் அலுவலர் அமிதாப் குப்தா, முதன்மை ஆப்பரேட்டிங் அலுவலர் சுதர்சன் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு தலைவர் கேசவன் வரவேற்று பேசினார்.
நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் அறிமுக உரை நிகழ்த்தினார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை 64-வது ஆண்டை தொட்டிருப்பது ஒரு மைல்கல். நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தோம். அதேபோல் இந்த நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையும் விரைவில் கொண்டாட உள்ளோம். ஒரு தொழிற்சாலை லாபகரமாக இயங்குவதில்தான் அதன் வெற்றி உள்ளது.
இங்கு தொழிலாளர்களும், அலுவலர்களும், நிர்வாகி களும் ஒரு குடும்பத்தினர் போல மகிழ்வுடன் இருப்பதை காண்கிறேன். இந்த ஒற்றுமை உணர்வை பாராட்டுகிறேன்.சிறந்த நிர்வாகத்தை தந்து வரும் ஜெயின் குடும்பத்தினர் மேலும் பல தலைமுறைகளை கடந்தும் இந்த தொழிற்சாலையை சீரிய முறையில் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் கிராம சூழலில் இருக்கும் இப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு மலர் வெளியீடு
விழாவின் சிறப்பு மலரை டி.கே.ராமச்சந்திரன் வெளியிட அதனை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் பெற்றுக் கொண்டனர். தொழிற்சாலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 29 தொழிலாளர்களுக்கு தலா 6 கிராம் தங்க நாணயமும், 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 136 தொழிலாளர்களுக்கு தலா 4 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 90 பேருக்கு கைகடிகாரம் வழங்கப்பட்டது.
மேலும் சுற்று வட்டார பள்ளிகளில் அரசு பொது தேர்வில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும் ரத்த தானம் செய்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தொழிலதிபர்கள் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ்குமார், டி.ராஜா, ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், காண்ட்ராக்டர்கள் கே.சிவகுமார், எஸ்.வெற்றிவேல், ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
விழா குழு துணைத் தலைவர் முருகேந்திரன் நன்றி கூறினார்.