விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
- சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்தில் 6 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உட்பட 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
- இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் உட்கோட்ட காவல்துறை சரகத்தில் 6 சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உட்பட 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கினார். மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்களையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ சமுதாயம் நினைத்தால், போதை பொருட்கள் விற்பனையை தடுத்து ஒழிக்க முடியும். மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதை பழக்கத்தை கைவிட வைக்க முடியும். மேலும், சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தி அவற்றை தடுக்க முடியும். மேலும், மாணவர்கள் தங்களது சுற்றுபுறங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, இன்ஸ் பெக்டர்கள் ஓமலூர் செல்வராசன், தீவட்டிப் பட்டி ஞானசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.