உள்ளூர் செய்திகள்

சிலர் கட்சியை தொடங்கியதுமே நாங்கள் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்கின்றனர்- விஜய் மீது முதலமைச்சர் தாக்கு

Published On 2025-02-07 10:36 IST   |   Update On 2025-02-07 10:36:00 IST
  • 2026 தேர்தலில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
  • மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்?

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற நிலையில், அதன் ஒருபகுதியாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு மற்றும் உறுப்பினர் படிவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

தி.மு.க.விற்கு வலுசேர்க்கும் வகையிலும், புகழ் சேர்க்கும் வகையிலும் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிசெய்யும் இயக்கம் தி.மு.க. மட்டும் தான்.

ஏழை-எளிய மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்காக இந்த இயக்கம் பாடுபடுமென அண்ணா தெரிவித்தார். அந்த இயக்கத்தை என் கையில் தந்தார்கள்.

அப்படிப்பட்ட கழகத்தில் வந்து நீங்கள் எல்லாம் இணைந்து இருக்கிறீர்கள். பா.ஜ.க.வில் இருந்து வந்த தயாசங்கர் எங்களுக்காக தனி நேரம் ஒதுக்கி வந்ததற்கு நன்றி தெரிவித்தார். இதைவிட எங்களுக்கு வேறு வேலை இல்லை. இதுதான் எங்கள் வேலை. மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிலர் கட்சியை தொடங்கியதுமே நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என கூறி வருகின்றனர். அதெல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள்? என்பது மக்களுக்கு தெரியும். 2026 தேர்தலில் 7-வது முறையாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News