பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது திமுக அரசு? டிடிவி தினகரன்
- பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
- தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித்தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.