பாலியல் அத்துமீறல் - ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: அன்பில் மகேஷ் அதிரடி
- ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம்.
- சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கிருஷ்ணகிரி, மணப்பாறை பள்ளி மாணவிகள் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி என்ற திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம். இருந்தாலும் சில நேரத்தில் பிள்ளைகள் மனதில் உள்ள பய உணர்வு காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கக்கூடிய நிலை இருப்பதால் தான் ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, 800-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் மீறி இப்படி நடக்கும்போது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் உண்மை தன்மை விசாரிக்கப்பட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். டிஸ்மிஸ் செய்வது, கடுமையான தண்டனைகள் வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் தாண்டி அவர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய வேண்டும். இனிமேல் எதற்கும் செல்ல முடியாத அளவிற்கு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
இனிமேல் தண்டனையோடு மட்டும் நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.