பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.84 கோடி நிதி வழங்கிய அமைச்சர்கள்
- அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.213 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள 7 மாடிகளை கொண்ட ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் ரூ.84 கோடியே 17 லட்சத்தை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இந்த நிதியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்துக்கு வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் உதவி மையம், வழிகாட்டி தகவல் மையம், சிற்றுண்டி அறை, காத்திருப்போர் அறை என புதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தரத்துக்கு உயர்த்தி உள்ளார். வடசென்னை வளர்ச்சி என்ற வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பல்வேறு வழிகளில் நிதி உதவி அளித்து வருகிறது.
அந்த வகையில் இந்த மருத்துவமனையின் கட்டமைப்புக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.84 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய நிதி ஆதாரம் ஒரே பணிக்காக அளிக்கப்பட்டு உள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
இதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்ச் 1-ந் தேதி முதலமைச்சரின் பிறந்த நாள் ஆகும். இதையொட்டி வருகிற 28-ந் தேதி இந்த ஆஸ்பத்திரி பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் டயாலிசிஸ் சிகிச்சை முறையாகவே அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தனியார் வசம் ஒப்படைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா பருவ காலங்களிலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயற்கையானதுதான்.
தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு ஒழிப்பு பணி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ச்சியாகவே கட்டுக்குள் உள்ளன.
டெங்கு பாதிப்பு 2 முறை அதிக அளவில் இருந்தது. 2012-ல் 66 பேரும், 2017-ல் 65 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இது தான் அதிகபட்ச உயிரிழப்பாகும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.
வடசென்னைக்கான வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகளின் சார்பிலும் தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி கொளத்தூர் பெரியார் நகர் ஆஸ்பத்திரி 860 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு சிறப்பு மருத்து வமனையாக மாற்றப்பட்டு உள்ளது.
இது வடசென்னை பகுதி மக்களுக்கு மிகவும் பலன் அளிக்கும். இந்த ஆஸ்பத்திரிக்கு 102 டாக்டர்கள், 236 நர்சுகள், 79 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 240 தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேயர் பிரியா, சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவ லர் சிவஞானம், தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் அருண், தம்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.