அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை! - கிருஷ்ணசாமி
- அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் கள ஆய்வு பயணத்தை நேற்று தொடங்கினார்.
இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.
இதனிடையே, நெல்லை வரும் முதலமைச்சர் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். அப்போது முதலமைச்சரும் நேரம் ஒதுக்கி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் அரசு விழாவுக்குப்புறப்படும் போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இருட்டுக்கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.! என்று கூறியுள்ளார்.