கடலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
- போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடலூர் , நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், வியாபாரிகள் இங்கு தினசரி வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி பூ மார்க்கெட்டுக்கு சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேற்கூரைகளை அகற்றி ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பூக்கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். தொடர்ந்து ஒரு நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி மூலமாக அகற்றப்படும் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று பூக்கடைகளின் மேற்கூரைகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் நாங்கள் கேட்ட கால அவகாசம் முடிவதற்குள் ஏன் கடைகளை அகற்றுகிறீர்கள் என்று அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.