உள்ளூர் செய்திகள்

சிறு நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா

Published On 2023-08-21 15:58 IST   |   Update On 2023-08-21 15:58:00 IST
  • சிப்காட் தொழிற்பேட்டை யில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
  • முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப் படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

ஓசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா இன்று தொடங்கியது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

அதன்படி, ஓசூர் பிளாட் எண்.308, 309 சிப்காட்தொழில் வணிக வளாகம், லால் கம்பெனி எதிரில், எஸ்.பி.ஐ. வங்கி அருகில், சிப்காட் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தின் பல்வேறு திட்ட ங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் 3 சதவீதம்) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீதம், எந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை இந்த சிறப்பு தொழில் முகாமில் வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு 04344-278876, 275596 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News