உள்ளூர் செய்திகள் (District)

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்:2,152 பேருக்கு சிகிச்சை

Published On 2023-10-02 09:18 GMT   |   Update On 2023-10-02 09:18 GMT
  • 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
  • மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும்.

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1,000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, வட்டாரத்திற்கு 3 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் மூலம் 2,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், ஓ.ஆர்.எஸ் திரவமும் வழங்கப்பட்டது.

காய்ச்சல் உள்ள நபர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும் முகாம் நடைபெற்ற அனைத்து கிராமங்களிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோ ரினேசன் செய்யப்பட்டது. இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் கிராமம் முழுவதும் டெங்கு கொசு புழுக்களை ஒழித்தல், தூய்மைப் பணியாளர்கள் மூலம் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை 3 நாட்களுக்கு ஒருமுறை நன்கு கழுவி பின் பயன்படுத்தவும், வீடு மற்றும் அருகில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளில் தண்ணீர் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தவும், காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

Tags:    

Similar News