நெல்லை தனியார் பணிமனையில் திடீர் தீ விபத்து: 2 பஸ்கள் எரிந்து நாசம்
- பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
- காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் தனியார் பஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக புறநகர் பஸ்கள், மினி பஸ்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகரிலும், நெல்லை மாவட்டத்திலும் இயங்கி வருகிறது.
இந்த பஸ்களுக்கான பராமரிப்பு மேற்கொள்ளும் பணிமனை தச்சநல்லூர் பகுதியில் உள்ளது.
இதில் நேற்று இரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பழுதாகி நின்ற பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி அளவில் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகில் மற்றொரு பஸ்சிலும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.
உடனடியாக பாளை தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 பஸ்சிலும் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் ஒரு பஸ் முற்றிலும் எரிந்தது. மற்றொரு பஸ் பாதி எரிந்தது.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றியது எப்படி என்பது குறித்து விசாரித்தனர். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது வெல்டிங் எந்திரத்தினை பயன்படுத்தி பணி செய்தபோது, தீப்பொறி பரவியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.