உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 250 பேர் கைது

Published On 2023-09-07 08:02 GMT   |   Update On 2023-09-07 08:02 GMT
  • மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
  • கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆர்.கோமதி, பழனிசாமி, சுந்தர்ராஜன், பொன் பாரதி உள்பட பலர் காளை மாட்டு சிலை பகுதியில் இன்று காலை திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

அப்போது அங்கிருந்து ஒரு சிலர் வேகமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதேபோல் கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News