உள்ளூர் செய்திகள்

மதுரையில் கிரேன் உதவியுடன் கட்டப்பட்ட பிரமாண்ட பூ மாலையை படத்தில் காணலாம்.

அரை டன் பூக்களை பயன்படுத்தி கட்டப்பட்ட 12 அடி உயர பிரமாண்ட மாலை

Published On 2023-04-11 10:12 IST   |   Update On 2023-04-11 10:12:00 IST
  • வீட்டில் நடத்தக்கூடிய சுப நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டத்தினரை காட்டிலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வித்தியாசமாக நடத்தவே விரும்புவார்கள்.
  • கிரேனை பயன்படுத்தி மிகப்பெரிய மாலை கட்டுவதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

மதுரை:

தூங்கா நகரம், கோவில் நகரம் என்று பெயர் பெற்றது மதுரை. இங்கு பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் வருவார்கள்.

நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருப்பதால் நகரின் பிரதான இடங்களில் கடைகள் முழு நேரமும் செயல்படும். அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக பூக்கள் விற்கக்கூடிய கடைகளும் விடிய விடிய திறந்திருக்கும்.

மதுரையில் புது ஜெயில் ரோடு, பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான வியாபாரிகள் பல தலைமுறைகளாக பூக்களை கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த இடங்களில் எப்போது சென்றாலும், அனைத்து வகை மாலைகளும் கிடைக்கும். வீட்டில் நடத்தக்கூடிய சுப நிகழ்ச்சிகளை மற்ற மாவட்டத்தினரை காட்டிலும், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வித்தியாசமாக நடத்தவே விரும்புவார்கள்.

அவற்றில் சில ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும். அந்த வரிசையில் மதுரை ஜெயில் ரோட்டில் உள்ள ஒருவரின் பூக்கடையில் பல அடி உயர பிரமாண்ட பூ மாலைகள் கட்டப்படுகின்றன. தற்போது அங்கு அரை டன் பூக்களை பயன்படுத்தி 12 அடி உயர பிரமாண்ட மாலை கட்டப்பட்டுள்ளது.

கிரேன் உதவியுடன் இந்த பிரமாண்ட மாலை கட்டப்பட்டது. கிரேனை பயன்படுத்தி மிகப்பெரிய மாலை கட்டுவதை அந்த வழியாக சென்ற பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். கிரேனை பயன்படுத்தி பிரமாண்ட மாலை கட்டுவது குறித்து அந்த கடையின் உரிமையாளர் முத்தையா கூறியதாவது:-

மதுரையில் பிரமாண்ட மாலை கட்டுவதில் நாங்கள் ஸ்பெஷலாக இருக்கிறோம். இதுவரை 3 மாலைகள் கட்டிக்கொடுத்துள்ளோம். முதல் மற்றும் 2-வது மாலை 10 அடி உயரத்தில் கட்டினோம். பல டன் பூக்களை பயன்படுத்தி கட்டுவதால் அந்த மாலையை சாதாரணமாக தூக்க முடியாது. இதனால் கிரேனை பயன்படுத்தியே பிரமாண்ட மாலைகளை கட்டுகிறோம்.

தற்போது கட்டப்படும் இந்த மாலை உசிலம்பட்டியில் நடக்கும் கட்சி கூட்டத்திற்காக கட்டுகிறோம். செவ்வந்தி, கேந்தி, ரோஜா என பல்வேறு வகையான 500 கிலோ எடையுள்ள பூக்களை பயன்படுத்தி இந்த மாலையை கட்டியுள்ளோம். இந்த மாலையின் விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.

மாலையை கட்டுவதில் இருந்து ஆர்டர் செய்தவர்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஒரு பூ கூட உதிராத வகையில் பூக்களை இறுக்கமாக கட்டுகிறோம். பிரமாண்ட மாலையை சரக்கு வாகனம் மூலமாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கொண்டு செல்வோம்.

பின்பு அந்த மாலையை அணிவிக்க வேண்டியவருக்கு, கிரேன் மூலமாகவே தூக்கி அணிவிப்போம். இந்த மாலையை பார்ப்பதற்கே திருவிழா போல் மக்கள் கூட்டம் கூடிவிடும். அடுத்த மாதம் முக்கிய பிரமுகரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக வெட்டி வேர்கள் மட்டுமே பயன்படுத்தி 15 அடி உயர மாலையை கட்ட உள்ளோம். அந்த மாலையின் விலை ரூ.3 லட்சம் ஆகும்.

மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் மதுரைக்காரர்களை வெல்ல யாரும் இல்லை. அதற்கு தகுந்தாற்போல் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட மாலை கேட்டாலும் கட்டிக் கொடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News