சிகரெட் வாங்கி தர மறுத்ததால் ஆத்திரம்: மோட்டார் சைக்கிளை உடலில் ஏற்றி 14 வயது சிறுவன் கொலை
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
- கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய இர்பான் நேற்று மாலை பாஞ்சாலியூர் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வழியாக சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக மது போதையில் வந்த மர்மநபர் சிறுவன் இர்பானிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கி வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு சிறுவன் இர்பான் மறுத்து சிகரெட் வாங்க செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மர்மநபர் இர்பானை தாக்கியுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தை கொண்டு இர்பான் மீது மோதி உடலில் ஏற்றி இறக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இர்பானை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இர்பான் உயிரிழந்தான்.
இதனால் கோபம் அடைந்த இர்பான் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பாஞ்சாலியூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு மதுபான கடை இங்கு செயல்படக்கூடாது. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மதுபோதையில் சிறுவனை தாக்கி இரு சக்கர வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.