அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டின் 90 சதவீத பணிகள் முடிந்தன: மேடை வடிவமைப்பு தீவிரம்
- மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
- நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பத்தில் தான் வருகிற 20-ந்தேதி காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த மாநாட்டில் இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து சுமார் பத்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.
மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.
தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மேடை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மாநாட்டு அரங்கில் அமைய உள்ள புகைப்பட கண்காட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளன. இந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சுட சுட உணவு வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்காக பத்தாயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.