உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-05-09 15:13 IST   |   Update On 2023-05-09 15:13:00 IST
  • வடசென்னை, மத்தியம், தென்சென்னை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
  • 700-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை:

சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசின் ஆட்டோ செயலியை உடனே தொடங்க வேண்டும், இருசக்கர வாகன டாக்சியை தடை செய்ய வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். வடசென்னை, மத்தியம், தென்சென்னை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். உண்ணா விரதத்தில் மாநில துணை செயலாளர் குமார், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர்கள் உமாபதி, அனிபா, கபாலி, ஜெயகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 700-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News