உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி: 90 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-01-27 12:39 IST   |   Update On 2023-01-27 12:39:00 IST
  • மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.
  • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர், உழவர் சந்தை அருகே மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் துளசி நாராயணன் கலந்து கொண்டு டிராக்டர் பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு டிராக்டர்களில் பேரணியாக சென்றனர். அவர்கள் திருவள்ளூர் உழவர் சந்தையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடத்தினர். இதேபால் ஏராளமானோர் மோட்டார்சைக்கிள்களிலும் பேரணியாக பங்கேற்றனர்.

எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு கொள்முதலை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்60 வயதை பூர்த்தி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக போலீசாரின் அனுமதி இல்லாமல் பேரணியாக சென்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அனுமதி இன்றி பேரணியாக சென்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள், விவசாயிகள் உட்பட 90 பேர் மீது திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்கு பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News