உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை படத்தில் காணலாம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன

Published On 2022-10-16 12:00 IST   |   Update On 2022-10-16 12:00:00 IST
  • அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பை கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
  • நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 40,747 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலம், குடகு, மண்டியா, மைசூரு மாவட்டத்திலும் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பை கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 40,747 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி என மொத்தம் 42,747 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவிரி கரையோர பகுதியினை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான உன்சன அள்ளி, உரிகம், ஹன்சனள்ளி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நீர்வரத்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் நடைபாதை, மாமரத்து கடவு, பரிசல் துறை உள்ளிட்டவை வெள்ளநீரில் மூழ்கின. ஒகேனக்கல் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

Tags:    

Similar News