வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
- 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவரது நண்பர்கள் குணா, விக்கி. இந்த நிலையில் தினேஷுக்கும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தினேஷ் வரதராஜபுரம் தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வரதராஜபுரம் பி.டி.சி. குடியிருப்பு பகுதி அருகே பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் ( 23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு ( 21), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சரண்குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.