உருக்கமான கடிதம் எழுதி வைத்து மனைவியின் நினைவு நாளில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்
- உருக்கமான கடிதம் எழுதி விட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீஸ்காரர் எழுதிய கடிதங்களை கைப்பற்றி தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொப்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது55). இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது முதல் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்கிற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்திராகாந்தி என்ற பெண்ணை இரண்டாவதாக மகேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சுந்தரேசன், இனிதா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் பணிக்கு செல்லாமல் தேங்காய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு குடும்ப தகராறு காரணமாக மகேஸ்வரன், இந்திராகாந்தியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜாமீனில் மகேஸ்வரன் வெளியே வந்துள்ளார்.
இதனால் அவர் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூரில் உள்ள உறவினர் வீட்டில் முதல் மனைவி மகன் விஜய்யுடன் இரண்டு மாதங்களாக தங்கி இருந்துள்ளார்.
முதல் மனைவியின் நினைவு நாளான கடந்த 11.8.22 அன்று காலை முதலே மகேஸ்வரன் மனம் உடைந்த நிலையில் அழுது கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மரத்தில் மகேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை இன்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது மகேஸ்வரன் மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.
அதில் தன் மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் என் மனைவியின் உயிர் பிரிந்ததற்கு நான் தான் காரணம். இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை.
மேலும் தன்னுடைய மகன் விஜய்க்கு, நீ என்னை மன்னித்துவிடு. உனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து விட்டேன்.
இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம். நீ உன் தாத்தா, பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று விடு.
உன் மாமாவிடம் பணம் கொடுத்து உள்ளேன். அதை வாங்கி எனது இறுதி சடங்கை முடித்து விடவும் என்று தன் மகனுக்கும் உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
மேலும் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இது நானாக எடுத்து கொண்ட முடிவு. என் மரணத்திற்கும் மற்ற யாருக்கும், எந்த தொடர்பும் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.
மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
உருக்கமான கடிதம் எழுதி விட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.